Home

Friday, July 2, 2010

சேலம் மாநகராட்சி

சேலம் (ஆங்கிலம்:Salem)
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும். சேலம் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை "மாங்கனி நகரம்" என்றும் அழைப்பார்கள்.

வரலாறு

சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள்.
இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது. சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.சி.வி. ராஜகோபாலசாரியார், சி. விஜயராகவாச்சாரி, ராமசாமி உடையார் ஆகியோர் இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள்

பொருளாதாரம்

சேலம் பல்வேறு கனிமவளங்கள் நிறைந்த இடம். இங்கு கிடைக்கும் இரும்பு தாதுவை பயன்படுத்தி இந்திய நடுவன் அரசின் செயில் (SAIL) நிறுவனம் சேலம் இரும்பாலையை அமைத்துள்ளது, இது தமிழ்நாட்டின் ஒரே உருக்கு ஆலை ஆகும்.
இந்தியாவில் மாக்னசைட் தாது பெருமளவு கிடைக்கும் இடங்களில் சேலமும் ஒன்று. டால்மியா & தமிழக அரசின் டான்மாங் (TANMAG - TAMILNADU MAGNESITE LIMITED) நிறுவனங்கள் மாக்னசைட் சுரங்கங்களை இங்கு அமைத்துள்ளன.

ஏற்காட்டிலிருந்து தெரியும் டான்மாங் மாக்னசைட் சுரங்கம்அதிக அளவில் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் இங்கு நடைபெறுகிறது.இது தவிர நூற்பாலை, வாகன உதிரிபாக ஆலை, சேகோ (சவ்வரிசி) ஆலை ஆகியவையும் உள்ளன.
கோழிப் பண்ணைகளும் அதிக அளவில் உள்ளன. இங்கு உள்ள லீ-பஜார், மஞ்சள், கடலை, தேங்காய், அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த சந்தைக்குப் பெயர் பெற்றது. பொதுவாக மாம்பழத்துக்கு பெயர் போன நகரம் என்பதால் இங்கு அதுவும் பிரசித்தி.
விரைவில் இங்கு ஒரு தகவல் தொழில் நுட்ப பூங்கா அமையவிருக்கிறது.
சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

ஆன்மீக தலங்கள்

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் கோவில்களை காணலாம். இங்கு உள்ள முக்கிய கோயில்கள் சில,

சேலம் அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில்
சேலம் அருள்மிகு சுகவனேஸ்வர் திருக்கோயில்
சேலம் அருள்மிகு கோட்டை பெருமாள் கோவில்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்-இந்த கோவிலின் திருவிழா மாநகரின் முக்கிய திருவிழாவாகும்.
சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவில்
சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில்
ஆடி மாதத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும் அதே சமயத்தில் சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவிலின் திருவிழாவும் சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவும் நடக்கும்.

கந்தாஸ்ரமம்
சித்தர் கோவில்- இது சித்தர்கள் கட்டிய கோவில் என்றும், இந்த கோவில் அமைந்து உள்ள கஞ்சமலையில் சித்தர்கள் இன்றும் வசிப்பதாக இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.இங்கு ஊற்றுகளில் இருந்து வரும் தண்ணீரை உட் கொண்டால் பல நோய்கள் குணமாவதாக மக்கள் நம்புகின்றனர்
ஊத்துமலை - சேலத்தில் உள்ள ஆன்மீக தளங்களில் இதுவும் ஒன்று. இது சேலம் மாநகரத்தின் தெற்கு பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு அமைந்துள்ள முருகன் கோவில் புகழ் பெற்றது. மேலும் இங்கு சிவபெருமான், பெருமாள் மற்றும் சௌடேஸ்வரி அம்மன் கோவில்களும் அமைந்துள்ளன. இங்குள்ள கிணறுகள் எவ்வளவு நீர் இறைத்தாலும் வற்றாதவை.
குமரகிரி
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

நன்றி மீண்டும் அடிப்படை அறிந்து சிந்தித்து நடப்போம் ......

No comments:

Post a Comment