Home

Saturday, September 4, 2010

அஸ்ஸாம் .

அசாம் அல்லது அஸ்ஸாம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த மாநிலமாகும். இந்த மாநிலத்தின் தலைநகர் திஸ்பூர். குவஹாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம். அசாமிய மொழியும், போடோ மொழியும் அசாமின் அதிகாரப்பூர்வ மொழிகளாகும். அசாம் மாநிலம் தெற்கு இமய மலையின் கிழக்கு பகுதியில், பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகளின் பாயும் பள்ளத்தாக்கையும், அதனை ஒட்டி அமைந்துள்ள மலைகளையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் பரப்பளவு சுமார் 78,438 சதுர கிலோமீட்டர்கள். அசாம் மாநிலத்தை ஒட்டியுள்ள 6 மாநிலங்களையும், அசாம் மாநிலத்தையும் , ஏழு சகோதரிகள் என்று அழைப்பர். அவையாவன: அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா. இவ்வேழு மாநிலங்களும் மற்ற இந்திய மாநிலங்களோடு மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஒரு சிறிய பகுதியின் மூலமாகவே நிலவழியாக இணைக்கப்படுகின்றன. இப்பகுதி சில்லிகுறி குறுவழி என்றும், கோழி கழுத்து என்றும் அழைக்கப்படுகிறது.அசாம் மாநிலம் பூட்டான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளுடன் சர்வதேச எல்லைகளையும் கொண்டுள்ளது. அசாம் மாநிலம், 1826 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் யாண்டபோ உடன்படிக்கையால் இந்தியாவின் அங்கமானது.

தேயிலை உற்பத்தியில் சிறந்து விளங்கும் அசாம் மாநிலம், பெட்ரோலியம், பட்டு ஆகியவற்றின் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. உலகில் வேறெங்கிலும் காண கிடைக்காத பல அரிய விலங்கினங்களும், தாவர வகைகளும் அசாம் காடுகளில் காணப்படுகின்றன. உதாரணமாக, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலி, ஆசிய யானை ஆகிய அரியவகை விலங்குகள் இம்மாநிலக் காடுகளில் வாழுகின்றன. இதன் காரணமாக, இவ்விலங்கினங்களை காண உலகமெங்கிலும் இருந்து இயற்கை ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் அசாம் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர். குறிப்பாக, காசிரங்கா பகுதியும், மணாஸ் பகுதியும் உலக பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. முன்காலத்தில் அசாம் மாநிலம் அதன் காட்டு வளத்திற்கும், காட்டில் இருந்து கிடைக்கும் பொருள்களுக்கும் புகழ்பெற்றிருந்தது. தொடர்சியான காட்டழிப்பால் இம்மாநிலத்தின் காடுகளின் நிலை பெரும் கேள்விகுள்ளாகியுள்ளது. உலகின் அதிக மழைபெய்யும் இடங்களில் ஒன்றான அசாம் மாநிலம், மாபெரும் ஆறான பிரம்மபுத்திரா ஆற்றினால் வளம் பெறுகிறது

பெயர்க்காரணம்

அசாம் மகாபாரதத்தில் பிரகியோதிசா என்ற பெயரிலும், காமரூபா அரசு என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறது. அசாம் என்ற பெயர் இப்பகுதியை 1228 முதல் 1826 வரை ஆண்ட அகோம் அரசுகளால் சூட்டப்பட்டதாக தெரிகிறது.ஆங்கிலேய ஆதிக்கத்தின்கீழ் 1838 ஆம் ஆண்டு வந்த அசாம் நிலப்பகுதி, அதே பெயரிலேயே அழைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 27ஆம் தியதி இன்றைய அசாம் அரசு மாநிலத்தின் பெயரை அசோம் என மாற்றியமைத்தது.இம்மாற்றம் மக்களிடையே பரவலான எதிப்பை உருவாக்கியது.

புவியியல்

பல புவியியல் ஆய்வுகளின் முடிவில் அசாம் மாநிலத்தின் வற்றாஆறான பிரம்மபுத்திரா ஆறு, இமயமலை தோன்றுவதற்கு முன்னரே தோன்றியதாகக் கண்டறிந்துள்ளனர். அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் மிகவேகமாக பாயும் பிரம்மபுத்திரா ஆறானது அசாம் மாநிலத்தில் வேகம் குறைந்து, பல கிளை ஆறுகளாக பிரிந்து, சுமார் 80 முதல் 100 கிலோமீட்டர் அகலமும், 1000 கிமீ நிளமும் கொண்ட பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கை வளம் செய்கிறது.

போடோ மக்கள்

போடோ மக்கள் (Bodos) எனப்படுவோர் வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வாழும் பழங்குடியினர் ஆவர். 1991 ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தில் 1.2 மில்லியன் போடோ இனத்தவர்கள் வாழ்கிறார்கள். இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 53. விழுக்காடு ஆகும். அசாம் மாநிலத்தின் உதால்குரி, கொக்ராஜார் ஆகிய நகரங்களில் இவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தியாவின் ஷெடியூல் வகுப்பினரில் போடோக்கள் 8வது இடத்தை (1971) வகிக்கின்றனர். இவர்கள் போடோ மொழியைப் பேசுகின்றனர்.போடோக்கள் போடோ-கச்சாரி என்ற இனக்குழுக்களின் 18 பிரிவுகளில் ஒன்று என 19ம் நூற்றாண்டில் முதன் முதலாக வகைப்படுத்தப்பட்டது. வடகிழக்கு இந்தியாவின் பெரும் பகுதியிலும், நேபாளத்திலும் போடோக்கள் வாழ்கின்றனர். பிரம்மபுத்ரா ஆற்றுக் கரைகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர்ர் போடோக்கள் ஆவர்.போடோக்கள் முன்னைய காலங்களில் தம்முடைய மூதாதையோரயே வழிபட்டு வந்தனர். இதற்கு "பாத்தூயிசம்" என்று பெயர். அண்மைக்காலங்களில் இந்து சமயத்தைப் பின்பற்றுகிறார்கள்.

போடோக்கள் இன்று
1980களின் இறுதிப் பகுதியில் இருந்து போடோக்கள் தமக்கு சுயாட்சி வழங்கக்கோரி உபேந்திரா நாத் பிரம்மா தலைமையில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர் இப்போது போடோக்களின் தந்தை என அழைக்கப்பட்டு வருகிறார். போடோக்களின் தனித்துவம், பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவற்றைப் பேண நடத்தப்பட்ட போராட்டங்களை அடுத்து இவர்களுக்கு "போடோலாந்து பிராந்தியக் கவுன்சில்" என்ற தனியான நிர்வாக அலகு தற்போதைய கொக்ராஜார் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. சுயாட்சிக்கான போராட்டங்கள் "அனைத்து போடோ மாணவர் அமைப்பு" மூலமாகவும், "போடோ விடுதலைப் புலிகள்" (Bodo Liberation Tigers, BLT) என்ற ஆயுத அமைப்பினாலும் முன்னெடுக்கப்பட்டது. இவர்களைவிட "போரோ பாதுகாப்பு படை", போடோலாந்து தேசிய மக்களாட்சி முன்னணி, போன்றவை ஆயுதம் தாங்கி தற்போதும் போராடி வருகின்றன.
2006 அசாம் மாநில தேர்தல்களில் போடோ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து திஸ்பூரில் போட்டியிட்டு ஆட்சியை அமைத்தனர்.


மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 26,655,528 100%
இந்துகள் 17,296,455 64.89%
இசுலாமியர் 8,240,611 30.92%
கிறித்தவர் 986,589 3.70%
சீக்கியர் 22,519 0.08%
பௌத்தர் 51,029 0.19%
சமணர் 23,957 0.09%
ஏனைய 22,999 0.09%
குறிப்பிடாதோர் 11,369 0.04%

நன்றி மீண்டும் பயணம் தொடரும் .. அறியாதவற்றை மீண்டும் அறியபடுத்துவதற்காக……

No comments:

Post a Comment